Aug 21, 2016

சிறுகதை - ஆனியன் ஊத்தாப்பம்


மாலை 6 மணி

எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் கணேஷ் பவன் அன்று வெறிச்சோடி கிடந்தது. மறையும் சூரியனின் பொன்னிற கதிர்கள் ஜன்னலின் வழியாக தவழ்ந்து நாங்கள் அமர்ந்திருந்த மேஜையை தாண்டி போக வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்தது.

அவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் டேபிளை தாளம் போடுவது போல் தட்டியபடி அவளை பார்த்துக்கொண்டிருந்தேன்.

சந்தியா.

எட்டு வருடங்களுக்கு முன்பு நான் பார்த்தது போலவே இருந்தாள். அதே அழகிய கண்கள், அதே சிரிப்பு, அதே நீள கூந்தல். பெண்களால் மட்டும் எப்படி எப்போதும் ஒரே போல் இருக்க முடிகிறது என்று எனக்குள் ஆச்சரியப்பட்டு மெல்லியதாய் புன்னகைத்தேன்.

எங்கிருந்தோ வந்த ஒளி கீற்று அவளின் கருவிழியை மின்ன செய்துகொண்டிருந்தது.

அவளின் அழகிய கண்களுக்குள் விழுந்து விடலாமா? என்று நான் நினைத்து கொண்டிருந்த நேரத்தில் "சார்" என்று ஒரு குரல் கேட்டது.

வெளிர் நீல சட்டையும், கரு நீல பேண்ட்டும், தோளில் ஒரு சிறிய துண்டும் போட்டபடி சர்வர் ஒருவன் நின்றுகொண்டிருந்தான்.

"என்ன இருக்கு?" என்றேன்.

"டிபன் ஐட்டம் எல்லாமே இருக்கு சார்" என்றான்.

"என்ன சாப்பிட்ற?" என்றேன் அவளிடம்.

"ஹே! எதுவும் வேணா பா" என்றாள்.

"கமான்! ஆர்டர் சம்திங்" என்றேன்.

"சரி! ஒரு ஆனியன் ஊத்தாப்பம்" என்றாள்.

நான் திரும்பி அவனிடம் "ஒரு ஆனியன் ஊத்தாப்பம் அன்ட் ஒரு பிளென் தோசை" என்றேன்.

புரிந்தபடி தலை ஆட்டிய அவன், விறுவிறுவென உள்ளே சென்றான்.
நான் மறுபடியும் அவளை பார்த்தேன்.

"என்ன?!" என்று சிரித்தபடி கேட்டாள். அவளுக்கு தெரியும், நான் அவளை பார்ப்பதற்கு காரணம் என்ன என்று. இருந்தும் கேட்டாள்.

"ஓண்ணும் இல்லபா! நீ சொல்லு!" என்றேன், அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று நன்றாக தெரிந்தும்.

"நானெல்லாம் லவ் விழுவேன்னு நினைக்கவே இல்லடா! அதுவும் எங்க வீட்ல கல்யாணத்துக்கு எல்லாம் ஒகே சொல்லுவாங்கனு நான் நினைச்சு கூட பாக்கல" என்றாள். மகிழ்ச்சியில் அவளின் முகம் மின்னியது.

அவள் பேசியது எதுவும் என் காதில் விழவில்லை. நான் அவளை மட்டும் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

ஒரு மெல்லி இசை அவளின் பேச்சை நிறுத்த, கையில் இருந்த தன் போனை எடுத்து பேச ஆரம்பித்தாள்.

"ஹெ! ஹாய்! ஆமா! இங்க பக்கத்துல தான் இருக்கேன். ! இதொ வந்திட்றேன்! பைவ் மினிட்ஸ்" என்றபடி காலை கட் செய்தாள்.

பின்பு தன் கை பையை சிறிது நேரம் துழாவிய அவள் என்னிடம் ஒரு கவரை நீட்டினாள்.

"வாசு! வர்ற 28ம் தேதி எனக்கு கல்யாணம். நீ கண்டிப்பா வரணும்." என்றாள்.

நான் சிரித்தபடி அதனை பெற்றுக்கொண்டேன்.

"வரலைனா அவ்ளொ தான்" என்று செல்லமாய் மிரட்டினாள்.

"கண்டிப்பா வரேன்" என்றேன்.

"உனக்கு எப்போ கல்யாணம். சீக்கிரம் பண்ணிக்கோ" என்றாள்.

அது வரை பலர் என்னிடம் கேட்ட, சொன்ன விஷயத்தை கல்லூரி நாட்களில் உள்ளூர ஒரு தலையாக நான் காதலித்த அவளும் சொன்னாள்.

"இன்னும் கொஞ்ச நாள் ஆகும்" என்றேன்.

"சூப்பர்! கண்டிப்பா இன்வைட் பண்ணு" என்று சொன்ன அவள், தன் வாட்ச்சை பார்த்தபடி இடத்தை விட்டு எழுந்தாள்.

"சரி வாசு! அவர் இங்க பக்கத்துல வெயிட் பண்றாரு. நான் கெளம்புறேன்."

"ஹெ! ஆர்டர் பண்ணதையாவது சாப்பிட்டு போ!" என்றேன்.

"சாரி டா! சம் அதர் டைம்" என்று சொல்லிவிட்டு சென்றாள்.

அவள் போன பின்பு பத்திரிக்கையை ஒரு முறை பார்த்த நான் அதன் மேல் "வாசு அன்ட் பேமிலி" என்று எழுதி இருப்பதை கவனித்தேன். எனக்கு யாரும் இல்லை என்று தெரிந்தும் அவள் அப்படி எழுதி இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஐந்து நிமிடத்திற்கு முன் ஆர்டர் எடுத்த சர்வர், என் டேபிளில் தோசையையும், ஊத்தாப்பத்தையும் வைத்தான்.

"தம்பி! ஊத்தாப்பம் மட்டும் ரிட்டர்ன் எடுக்க முடியுமா?" என்றேன்.

அவன் என்னையும் கையில் இருந்த பத்திரிக்கையையும் ஒரு முறை பார்த்தான். என்ன நடந்திருக்கும் என்று கணித்திருப்பான் போல. ஆனால் அவன் அதை வெளி காட்டிக்கொள்ளவில்லை.

"சாரி சார்! ரிட்டர்ன் எடுக்க மாட்டோம். தப்பா எடுத்துகாதீங்க" என்றான்.

"சரிப்பா! பரவால்ல" என்றபடி என் பக்கம் இருந்த தோசையை சாப்பிட ஆரம்பித்தேன்

நிறைய நேரம் வேலை முடிந்து வரும்போது அங்கே தோசை சாப்பிடுவது வழக்கம். அருமையாக இருக்கும். ஆனால் அன்று ஏனொ ஒவ்வொரு துண்டும் உள்ளே இறங்க மறுத்தது. மனம் அவளின் மிளிரிய கண்களையும், அவள் தந்த பத்திரிக்கையையும் நினைத்து நினைத்து களைத்து போயிருந்தது

"ஏழு மணிக்கு ஷிப்ட்! சீக்கிரம் சாப்பிடு" என்று எனக்குள் ஒரு குரல் எச்சரிக்க, அவசரமாய் அந்த தோசையை சாப்பிட ஆரம்பித்தேன்.

ஐந்து நிமிடம் கழித்து கடைசி துண்டு தோசையை நான் மென்றுகொண்டிருக்கையில் பில் வந்தது. பில்லில் அவள் ஆர்டர் செய்த 75 ரூபாய் ஆனியன் ஊத்தாப்பத்தையும் சேர்த்து 125 ரூபாய் போடப்பட்டிருந்தது.
  


எழுத தெரியாதவனுக்கு புனைப்பெயர் வந்த கதை (சிறுகதை)

சமீபகாலமாக நான் படித்த புத்தகங்களும் ,பார்த்த சினிமாவும் , பன்னிரெண்டாம் வகுப்பில் நா ன்படித்த கோனார் தமிழ் உரையும், என்னை எதாவது எழுத வே...